கொரோனா வைரஸ்: உலகில் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது - Corona World updates

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (23:12 IST)
கொரோனா வைரஸ்: உலகில் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது - Corona World updates

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,87,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,921 பேர் பலியாகி உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 1,375 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இப்படி கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க இரானில் மட்டும் கொரோனா தாக்கக்கூடாது என்பதற்காக மது அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இரானில் ஃபார் எனப்படும் மாகாணத்தில் கொரோனாவில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பலரும் மது அருந்தியுள்ளனர்.

அங்கு கொரோனாவால் 13 பேர் உயிரிழந்த நிலையில், மது அருந்திய காரணத்தினால் 66 பேர் பலியாகி உள்ளதாக ஃபார் மாகாணத்தின் அவசர சேவை மைய இயக்குநர் மொஹமத் ஜாவத் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.


இரானில் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,556 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் அதிகம் பேர் உயிரிழந்திருப்பது இத்தாலியில்தான்.

உலகிலேயே இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர்.

அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,326 பேரும் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரொனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதோடு அங்கு மொத்தம் 307 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 1,269 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனீசியாவில் இதுவரை 450 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இத்தொற்றால் 38 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனீசிய தலைநகர் ஜகார்டாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் 15 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஷாப்பிங் சென்டர்கள், சந்தைகள் மற்றும் கடைகள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் இளைஞர்களை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமான ஜெனிவாவிலிருந்து இணையம் மூலமாக உரையாற்றிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், "இளைஞர்களே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல. உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்காக மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் மரணிக்கக் காரணமாக அமையலாம். கவனமாக இருங்கள். வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்," என்றார்.



சர்வதேச அளவில் வயதானவர்கள்தான் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகளவில் பலியாகி இருக்கின்றனர்.

இத்தாலியில் வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் சராசரி வயது 78.5.
சீனாவில் பலியானவர்களில் 1 சதவீதம் பேர்தான் 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இறந்தவர்களில் 15 சதவீதம் பேர் 80 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்.

 
சரி. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் நடந்த தகவல்களை பார்ப்போம்.
 
சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறாக இருக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 88,210 பேர் குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்