சீனாவின் கடன் வலை: ஏழை நாடுகளுக்கு கடனை வாரிக் கொடுத்து தன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (01:07 IST)
ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அந்நாடுகள் பெய்ஜிங்கின் அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
 
ஆனால் அக்கருத்தை சீனா நிராகரிக்கிறது. தங்கள் பிம்பத்தை கெடுக்கும் வகையில், மேற்கு நாடுகளில் சிலர் இக்கருத்தை கூறி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது.
 
"சீனாவிடம் கடன் வாங்கியதன் விளைவாக ஒரு நாடு கூட 'கடன் பொறி' என்று அழைக்கப்படும் சூழலில் சிக்கவில்லை." என்கிறது சீனா.
 
சீனாவின் கடன் குறித்து நமக்கு என்ன தெரியும்?
உலகின் மிகப்பெரிய கடன் வழங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான அதன் கடன்கள் கடந்த பத்தாண்டுகளில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்து, 2020ஆம் ஆண்டின் இறுதியில் $170 பில்லியனைத் தொட்டது. சீனாவின் ஒட்டுமொத்த கடன்கள், இந்த புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட அதிகமாக இருக்கலாம்.
 
அமெரிக்காவின் வில்லியம் & மேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச மேம்பாட்டு அமைப்பான எய்ட் டேட்டாவின் ஆராய்ச்சி, வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் பாதி கடன்கள் கடன் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.
 
இது பெரும்பாலும் அரசாங்க குறிப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வங்கிகள், கூட்டு முயற்சிகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகின்றன.
 
இப்போதும் 40 க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் தங்களின் மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்துக்கு மேலான கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுள்ளன.
 
ஜிபூட்டி, லாவோஸ், ஜாம்பியா, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளன.
 
சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடனில் பெரும்பகுதியான கடன்கள், அதிபர் ஷி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
'கடன் பொறிகள்' என்றால் என்ன, அதற்கு ஆதாரம் என்ன?
 
பிபிசி உடனான பேட்டியில், பிரிட்டனின் வெளிநாட்டு உளவு அமைப்பான எம் ஐ 6-ன் தலைவரான ரிச்சர்ட் மூர், சீனா மற்ற நாடுகளை தன் கைக்குள் வைத்திருக்க கடன் பொறிகளை பயன்படுத்துவதாகக் கூறினார்.
 
சீனா மற்ற நாடுகளுக்குப் பணத்தைக் கடனாகக் கொடுக்கிறது, அந்நாடுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது முக்கிய சொத்துக்களின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டியதாகிறது - இக்குற்றச்சாட்டை சீனா நீண்டகாலமாக மறுத்து வருகிறது.
 
சீனாவை விமர்சிப்பவர்களால் அடிக்கடி குறிப்பிடும் ஓர் உதாரணம் இலங்கை. பல ஆண்டுகளுக்கு முன் சீன முதலீட்டுடன் ஹம்பந்தோட்டாவில் ஒரு துறைமுகத் திட்டம் தொடங்கப்பட்டது.
 
சீன கடன்கள் மற்றும் சீன ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கில் செலவழிக்கப்பட்ட திட்டம், எதார்த்தத்தில் சாத்தியமாக லாபம் ஈட்டக் கூடியது தான் என நிரூபிக்க முடியாமல் திணறி சர்ச்சையில் சிக்கியது இலங்கை. அது அந்நாட்டை பெருங்கடனில் ஆழ்த்தியது.
 
இறுதியாக, கடந்த 2017 ஆம் ஆண்டில், மேற்கொண்டு சீனா முதலீடு செய்வதற்கு ஈடாக, துறைமுகத்தில் 70% கட்டுப்பாட்டை சீன வணிகர்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்க இலங்கை ஒப்புக்கொண்டது.
 
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸ், துறைமுகத் திட்டத்தைப் பற்றிய பகுப்பாய்வில், "கடன் பொறி" கருத்து பொருந்துமா என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் உள்ளூர் அரசியல் உள்நோக்கங்களால் உந்தப்பட்டது என்றும், மேலும் சீனா ஒருபோதும் துறைமுகத்தின் முறையான உரிமையைப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கையின் ஒட்டுமொத்த கடனில் பெரும்பகுதி கடன் சீனாவிடமிருந்து பெறப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. எனவே, துறைமுகத்தில் ராணுவ ரீதியிலான அனுகூலத்தைப் பெற, சீனா தனக்கு சாதகமாக இருக்கும் சூழலைப் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அது சுட்டிக்காட்டுகிறது.
 
கடந்த தசாப்த காலத்தில் இலங்கையில் சீனாவின் பொருளாதார ரீதியிலான தலையீடுகள் அதிகரித்துள்ளதோ என சிறிய சந்தேகம் இருக்கிறது. மேலும் அது அப்பிராந்தியத்தில் தன் அரசியல் லட்சியங்களை முன்னேற்றப் பயன்படுத்தப்படலாம் என்கிற கவலைகள் தொடர்கின்றன.
 
உலகின் பிற பகுதிகளிலும் சீனா கடன் வழங்குவது சர்ச்சைக்குரிய ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கடன் ஒப்பந்தங்களின் விதிமுறைகள் முக்கிய சொத்துக்களை சீனாவுக்கு அளிக்கும் வகையில் சாதகமாக இருக்கும் என்ரு கூறப்பட்டது.
 
ஆனால் எய்ட் டேட்டா மற்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த நூற்றுக்கணக்கான கடன் விவகாரங்களில், ஒன்றில் கூட, கடனை செலுத்தத் தவறினால், கடன் வழங்கியவர்கள், ஒரு பெரிய சொத்தை உண்மையில் கைப்பற்றிய நிகழ்வு எதுவும் இல்லை.
 
 
சீனா தனது வெளிநாட்டுக் கடன் விவரங்களை வெளியிடுவதில்லை, மேலும் பெரும்பாலான சீன கடன் ஒப்பந்தங்களில், கடன் வாங்குபவர்கள், கடன் குறித்த விவரங்களை வெளியிடக் கூடாது என்கிற விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச கடன் ஒப்பந்தங்களில் இத்தகைய ரகசியத்தன்மை பொதுவான நடைமுறை என்று அது வாதிடுகிறது.
 
"சர்வதேச வணிகக் கடன்களில் ரகசிய ஒப்பந்தங்கள் மிகவும் பொதுவானவை" என்கிறார் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீ ஜோன்ஸ்.
 
"மேலும் சீனாவின் வளர்ச்சிக்கான நிதியுதவியானது அடிப்படையில் ஒரு வணிக நடவடிக்கையாகும்." என்கிறார் அவர்.
 
பெரும்பாலான தொழில்மயமான நாடுகள், பாரிஸ் கிளப் என்று அழைக்கப்படும் உறுப்பினர்களின் மூலம் தங்கள் கடன் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
 
சீனா இந்த குழுவில் சேர்வதில்லை என முடிவு செய்தது. ஆனால் கிடைக்கக்கூடிய உலக வங்கியின் தரவைப் பயன்படுத்தி, மற்ற நாடுகளின் கடன் விவரங்களோடு ஒப்பிடுகையில் சீனாவின் கடன்களின் விரைவான வளர்ச்சியை தெளிவாகக் காணலாம்.
 
 
சீனா மேற்கத்திய அரசாங்கங்களை விட அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுக்க முனைகிறது.
 
ஏறக்குறைய 4% வட்டிக்கு கடன் கொடுக்கிறது. இந்தக் கடன்கள் வணிகச் சந்தை விகிதங்கள் அளவுக்கு உள்ளன. உலக வங்கி அல்லது பிரான்ஸ் அல்லது ஜெர்மனி போன்ற தனிப்பட்ட நாடுகள் மற்றும் அமைப்புகள் வட்டி வசூலிப்பதை விட இது நான்கு மடங்கு அதிகம்.
 
சீனக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக் கெடு 10 ஆண்டுகளுக்கும் குறைவு தான். வளரும் நாடுகளுக்கு கிடைக்கும் சலுகை விலை கடன்களுக்கு 28 ஆண்டுகள் வரை கிடைக்கின்றன. சீன அரசுக்குச் சொந்தமான கடனளிப்பவர்கள், கடனளிக்கும் நிறுவனம் அணுகக்கூடிய ஒரு வெளிநாட்டுக் கணக்கில் குறைந்தபட்ச ரொக்க இருப்பை வைத்திருக்க வேண்டும் என்கிறது.
 
"ஒரு கடனாளி தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், நீதிமன்ற செயல்முறையின் மூலம் மோசமான கடனைச் வசூலிக்காமல், இந்த கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்." என்கிறார் எய்ட் டேட்டாவின் நிர்வாக இயக்குநர் பிராட் பார்க்ஸ்.
 
மேற்கத்திய நாடுகள் வழங்கும் கடன்களில் இந்த அணுகுமுறை அரிதாகவே காணப்படுகிறது.
 
மிகப்பெரிய மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் - பெருந்தொற்றின் தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்கி உதவும் திட்டத்தை ஜி20 நாடுகள் முன்னெடுத்துள்ளன. சீனாவும் அதனுடன் இணைந்துள்ளது. மேலும் அத்திட்டத்தில் பங்கேற்ற எந்தவொரு நாட்டை விடவும், அதிக அளவில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தான் பங்களித்துள்ளதாகக் கூறுகிறது சீனா.
 
மே 2020 முதல், இந்தத் திட்டத்தின் கீழ் ஜி20 நாடுகள் மொத்தம் 10.3 பில்லியன் டாலர் கடன் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது. உலக வங்கியிடம் நாடு வாரியாக அவ்விவரத்தைக் கேட்ட போது, ​​தகவல்களைப் பகிர முடியாது என்று கூறியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்