வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (17:20 IST)
உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கியமான தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.



"வாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?"

தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் தங்களது குறிப்பிடத்தக்க நேரத்தை குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப்பில்தான் செலவிடுகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால், மற்ற சில செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கே சவால்விடும் வகையிலான புதுப்புது வசதிகளை பயனர்களுக்கு அளித்த வண்ணம் உள்ளன. எனவே, வாட்ஸ்ஆப் நிறுவனமும் தனது போட்டி செயலிகளான டெலிகிராம், ஸ்நேப்சாட், ஹைக் போன்றவை ஏற்கனவே அளித்துக்கொண்டிருக்கும் வசதிகளை தனது பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாக கூறுகிறது.


அந்த வரிசையில், ஒவ்வொரு வாட்ஸ்ஆப் பயனருக்கும் பயனுள்ளதாகவும், அதே சமயத்தில் தலைவலியாகவும் இருக்கிறது குரூப்களில் பகிரப்படும் எண்ணற்ற குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகள். அவற்றை தடுப்பதற்கு அட்மின்கள் படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. இந்நிலையில், அதற்கான தீர்வை அளித்துள்ளது வாட்ஸ்ஆப் செயலியின் புதிய வசதி.

உதாரணத்திற்கு, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 133 பேர் உள்ளதாகவும், அதில் அட்மின்களாக உள்ள மூன்று பேர், அந்த குரூப்பில் தாங்கள் மட்டுமே தகவல்களை பகிர வேண்டுமென்று விரும்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கனவாக இருந்த அட்மின்களின் இந்த விருப்பம் தற்போது சாத்தியமாகியுள்ளது.

இதை எப்படி செய்வது?



1. நீங்கள் அட்மினாக இருக்கும் ஏதாவதொரு குரூப்புக்குள் நுழையுங்கள்.

2. அதில் குரூப்பின் பெயரையோ அல்லது 'Group info' என்பதையோ தெரிவு செய்யவும்.

3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.

5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.





அவ்வளவுதான்! இனி உங்கள் குரூப்பில் பத்து பேரோ, நூறு பேரோ அல்லது இருநூறு பேர் இருந்தாலும், அட்மின்களால் மட்டும்தான் குரூப்பில் தகவல்களை பதிவிடவோ அல்லது பகிரவோ முடியும்.

(மேற்காணும் விடயங்களை உங்களது கைபேசியில் மேற்கொள்ள முடியவில்லையென்றால், செயலியின் வர்ஷனை (பதிப்பை) அப்டேட் செய்யவும்.)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்