தாய்-மனைவி- தொடர் சண்டை : மகன் என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (16:38 IST)
தாய்-மனைவி இருவருக்குமிடையேயான தகராறை நிறுத்துவதற்காக மகன் செய்த காரியம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகர்கோவில் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் உய்யம்மாள். இவரின் மகன் கலியமூர்த்திக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
 
ஆனால், கலியமூர்த்தியின் மனைவிக்கும், உய்யம்மாளுக்கும் இடையே தொடக்கம் முதலே ஒத்துவரவில்லை எனத்தெரிகிறது. இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக வெடித்துள்ளது. சில சமயங்களில் அவர்களின் சண்டை தெரு வரைக்கும் நீண்டுள்ளது.
 
இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலியமூர்த்தி நிம்மதி இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவர், 2 மாதங்களுக்கு முன்பு அவரின் தாய் உய்யம்மாளை கொலை செய்து தனது வீட்டின் தோட்டத்திலேயே புதைத்து விட்டார். தாயை காணவில்லை என போலீசாரிடமும் புகார் கொடுத்தார். 
 
உறவினர்களிடமும், அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் மனைவியுடன் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு எங்கோ சென்று விட்டதாக கூறி வந்துள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் அவர்தான் தாயை கொலை செய்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தாயை கொலை செய்து வீட்டிலேயே புதைத்துவிட்டு கலியமூர்த்தி நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்