அமெரிக்காவின் புளோரிடாவில், தானமாக போடப்பட்ட ஆடைகளை எடுக்க முயற்சித்த ஒரு பெண், ஆடை தான பெட்டிக்குள் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை தான பெட்டிக்குள் ஒருவர் சிக்கிக்கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவலர்கள் அங்கு சென்றபோது, ஆடைகள் மற்றும் காலணிகள் தானமாக சேகரிக்கப்படும் பெரிய, பெட்டிக்குள் அடையாளம் தெரியாத பெண், சிக்கிய நிலையில் இருப்பதை கண்டனர். அவரை சோதித்த காவல்துறை, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தது.
அந்தப் பெண்ணின் மரணம் திட்டமிட்டதா அல்லது தற்செயலானதா என்பது உடனடியாக தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. "தற்போதைய நிலவரப்படி, இது ஒரு விபத்து போலவே தெரிகிறது. எனினும், எங்கள் துப்பறியும் பிரிவு முழுமையான விசாரணையை நடத்தி வருகிறது," என்று காவல் துறை விளக்கமளித்துள்ளது.