இதெல்லாம் ஓவரா இல்ல..? டைனோசர் தோலில் பேக் செய்து விற்பனை!?

Prasanth Karthick

வெள்ளி, 2 மே 2025 (10:48 IST)

டைனோசரின் தோலை உருவாக்கி அதை வைத்து ஹேண்ட் பேக் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

டைனோசரின் டிஎன்ஏவை வைத்து அதை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உருவான ஒரு படைப்புதான் ஜுராசிக் பார்க். அந்த படத்தில் வருவது போல அழிந்து போன டைனோசர்களை திரும்ப உயிருடன் கொண்டு வர முடியுமா என்பது குறித்து அவ்வபோது சில ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று செய்து வரும் ஆராய்ச்சி அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டது.

 

நியூகேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல கோடி ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்த டைனோசரின் புதைப்படிமங்களில் இருந்து டி என் ஏ சாம்பிள்களை எடுத்து டைனோசரின் தோலை தயாரிக்க உள்ளனர். முக்கியமாக டைனோசர் இனத்தின் வேட்டையாடும் டைனோசரான டி-ரெக்ஸின் தோலை தயாரிக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.எதற்காக தெரியுமா? ஹேண்ட் பேக், ஷூ போன்ற தோல் பொருட்களை செய்ய..!

 

ஆம், டைனோசரின் டிஎன்ஏவை கொண்டு ஆய்வகத்திலேயே இந்த தோலை தயாரிக்க உள்ளனர். தற்போதைய பேஷன் உலகில் தோல் பொருட்களுக்கான வரவேற்பு அதிகமாக உள்ள நிலையில் ஆசியப் பகுதிகளில் தோல் பொருட்கள் தயாரிப்புக்காகவே முதலைகள் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. இந்நிலையில் தற்போது பூமியில் வாழ்ந்து வரும் மிருகங்கள் தோலுக்காக வேட்டையாடப்படுவதை தவிர்க்க இந்த ஆய்வை நடத்தி வருவதாக கூறப்பட்டாலும், டைனோசர் தோல் என்ற விளம்பரத்தால் இவற்றின் விலையும் எக்கச்சக்கமாக இருக்கும், பணக்காரர்கள் வாங்க கூடியதாக இருக்கும் என அறுதியிட்டு சொல்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். 

 

சமீபத்தில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ட்யர் வுல்ப் என்ற ஓநாய் இனத்தை டிஎன்ஏ வைத்து உயிருடன் கொண்டு வந்தனர். இப்போது டைனோசர் தோலை உருவாக்க முயல்கின்றனர். நாளை டைனோசரையே உருவாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்