கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்து பணியை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம், தனது ஊழியர்களை நிரந்தரமாகவே வீட்டில் இருந்தே பணி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இது குறித்து டுவிட்டர் நிறுவனர் ஜாக் அனைத்து பணியாளர்களுக்கும் இமெயில் அனுப்பியுள்ளதாகவும், அதில்,கொரோனா பரபரப்பு முடிவுக்கு வந்த பின்னரும் பணியாளர்கள் விரும்பினால் அவர்கள் வீட்டில் இருந்தே பணி பார்க்கலாம் என்றும் நேரில் சென்று பணி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள பணியாளர்கள் மட்டுமே அலுவலகம் வந்தால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்ற உண்மையை கடந்த மாதங்கள் நமக்கு உணர்த்தியுள்ளதாகவும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை பார்க்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன என்பது தெரிந்ததே