முகத்தை சர்ஜரி செய்து போலீஸுக்கே தண்ணி காட்டிய தாதா! – சிக்கியது எப்படி?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (09:46 IST)
தாய்லாந்தில் போலீஸால் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த ரவுடி முகத்தை மாற்றிக் கொண்டு போலீஸுக்கே தண்ணிக் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தலைவிரித்தாடும் பெரும் குற்றமாக போதைப்பொருள் கடத்தல் இருந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க அந்நாட்டு அரசுகள், காவல்துறை பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தாய்லாந்திலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ரவுடிகள், தாதாக்களை கண்டறிந்து பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த சஹாரத் சவாங்ஜாங் என்ற 25 வயது இளைஞர் அவ்வாறாக தொடர்ந்து போலீஸின் ஹிட் லிஸ்ட்டில் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து அவரை போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் சமயோஜிதமாக ஒரு திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி முகமாற்று அறுவை சிகிச்சை செய்த சஹாரத் தனது முகத்தை ஒரு கொரிய இளைஞனை போல் மாற்றிக் கொண்டுள்ளார். இது தெரியாத போலீஸ் அவரது பழைய புகைப்படத்தை கொண்டு தொடர்ந்து பல இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிக்காமல் அவர்கள் முன்பே சாவகாசமாக திரிந்துள்ளார் சஹாரத். ஆனால் சஹாரத் முகமாற்று சிகிச்சை செய்த பின்னரும் கூட தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சஹாரத் போல போதைப்பொருள் கடத்தும் ஒரு சிலரை போலீஸார் பிடித்தபோது, அவர்களிடம் சஹாரத் குறித்து விசாரித்த போதுதான் முகமாற்று சிகிச்சை செய்து சஹாரத் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. பின்னர் முகத்தை மாற்றிக் கொண்டு பெயரையும் சியோங் ஜிமின் என மாற்றிக் கொண்டு திரிந்த சஹாரத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் வியாபாரம் மூலமாக பணம் சேர்த்து வைத்திருந்த சஹாரத் தென்கொரியாவுக்கே தப்பி சென்று சுகபோக வாழ்க்கை வாழ திட்டமிட்டிருந்துள்ளார். அதற்கு சில நாட்கள் முன்னதாக இவ்வாறு போலீஸில் பிடிபட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்