அமெரிக்க நூலகத்தில் தமிழக மருத்துவரின் நூல்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (15:47 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டாம் ரெய்ட் நூலகத்தில், தமிழக மருத்துவரும், மருத்துவ எழுத்தாளருமான எஸ்.அமுதகுமார் எழுதிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.


 
 
உடலும் உணவும், நலம் தரும் நடைப் பழக்கம், தலை முதல் கால் வரை, பயனுள்ள மருத்துவச் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 6 புத்தகங்களை எழுதியுள்ளார் டாக்டர் அமுதகுமார்.
 
மருத்துவ ஆலோசகர், மருத்துவ எழுத்தாளர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வரும் டாக்டர் எஸ். அமுதகுமார், சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.
 
அப்போது டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பியர்லேண்ட் நகர மேயர் டாம் ரெய்டைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தான் எழுதிய 6 மருத்துவ புத்தகங்களையும் மேயரின் பெயரிலுள்ள 'டாம் ரெய்ட்' நூலகத்துக்கு வழங்கி, அவரிடம் வாழ்த்து பெற்றார்.
 
அந்தப் புத்தகங்களை வாங்கி பார்த்த டாம், அந்த புத்தகங்களின் உள்ளடக்க விவரங்களை அறிந்து, அவற்றை எழுதிய டாக்டர் அமுதகுமாரை பாராட்டியதோடு, இனிவரும் நாட்களில் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழி புத்தகங்கள் தமது பெயரில் உள்ள நூலகத்தில் வைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தார். இதனால் தமிழ் உள்ளிட்ட மேற்கூறிய மொழிகளின் புத்தகங்கள் அமெரிக்க நூலகம் ஒன்றில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்