ஒழுக்க கேட்டை தவிர்க்கும் முயற்சி.. இணையதள சேவையை துண்டித்த ஆப்கன் தலிபான் அரசு..!

Mahendran

வியாழன், 18 செப்டம்பர் 2025 (16:25 IST)
ஆப்கானிஸ்தானில் ஆறு மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவையை துண்டித்து, தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி" எனக்கூறி, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பெரும்பாலான மாகாணங்களில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் வீடுகளில் வைஃபை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, மொபைல் இணைய சேவைகள் மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி, வடக்கு பால்க் மாகாணத்தில் முதன்முதலில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பாக்லான், படாக்‌ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களிலும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
 
தலிபான்களின் இந்த செயலுக்கு, அந்நாட்டின் ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடை, லட்சக்கணக்கான மக்களின் தகவல் தொடர்பை முடக்கியுள்ளதாகவும், ஊடகங்களின் சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்