ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

Siva

திங்கள், 1 செப்டம்பர் 2025 (11:46 IST)
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்க சம்பவத்தில் இதுவரை குறைந்தது 622 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தலிபான் தலைமையிலான உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு, ஜலலாபாத்துக்கு வடகிழக்கே சுமார் 27 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
 
நிலநடுக்கம் வெறும் 8 கி.மீ. ஆழத்திலேயே ஏற்பட்டதால், இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குனார் மாகாணத்தில் பல கிராமங்கள் முழுமையாக அழிந்துள்ளன.
 
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன.
 
குனார் மாகாணத்தில் உள்ள நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சாபதாரே ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
 
நங்கர்ஹார் மாகாணத்தில் 250 பேரும், லக்மான் மாகாணத்தில் 80 பேரும் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்