காசா போரை நிறுத்துங்கள்.! ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்.!!

Senthil Velan
வியாழன், 18 ஜூலை 2024 (09:57 IST)
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் காசா தற்போது போர்க்களமாகியுள்ளது. போரை நிறுத்த வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை நடந்த விவாதத்தில் பேசிய இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா,  பாலஸ்தீன வளர்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உதவி செய்து வருகிறது என்றும் இதுவரை 120 மில்லியன் டாலர் அளவில் உதவிகளை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 
 
கடந்த அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை வலுவாகக் கண்டித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்  அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ALSO READ: ஜூலை 25-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்.! இந்த 3 பிரச்சனைகளுக்கு கண்டனம்.!!
 
மேலும் காசாவில் மனிதாபிமான உதவிகள் எவ்வித தடையுமின்றி சென்று சேர வேண்டும் என்றும்  ஹமாஸும் எவ்வித நிபந்தனையின்றியும் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்