பள்ளி வகுப்பறைகளும்.....கரோனா கற்றுத்தந்த பாடங்களும்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:23 IST)
கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் சேவை நிறுத்தப்பட்டன. தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

பள்ளிகளும் கல்லூரிகளும் அடைக்கப்பட்டன. பள்ளி சென்று, வகுப்பறையில் அமர்ந்து சக மாணவர்களோடு விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியான அந்த நாட்கள் வெறுமையாகின. பாதுகாப்பு கருதி அனைத்து கல்வி நிறுவனங்களும் இணைய வழிக் வகுப்புகளை தொடங்கி நடத்தின. இதனால் பால பள்ளி வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் வீட்டில் இருந்தே கல்வி கற்றனர் இந்நிலையில் அமெரிக்காவின் சில நகரங்களில் இணைய வழிக் கல்வி பயில்வோர்களில் 5 பேரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை இடைநிறுத்திவிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆகவே, பள்ளி வளாகமே கல்வி பயில ஏதுவானது. ஆனால், கொள்ளை நோய் காலத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அறைகூவலான விஷயம்.

கடந்த மே மாதம் இஸ்ரேலில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி, பள்ளிகள் திறக்கப்பட்டபோது 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவில் பள்ளிகள் திறப்பு விவகாரத்திலும் அரசியல் இருப்பதை காணமுடிகிறது. அதே நேரத்தில் கரோனாவால் முதன் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சீனாவை பொருத்தவரை சமீபத்தில் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

வகுப்பறைகளில் மாணவர்களிடையே இடைவெளி, கட்டாய முகக் கவசம், காற்றோட்ட வசதி கண்காணிப்பு, பெற்றோருடனான விசேட் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அரசியல் கண்ணோட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒற்றை சிந்தனையுடன் அரசும் மக்களும் செயல்பட்டால் மட்டுமே பேரிடர்கால அறைகூவல்களை எதிர்கொள்ள முடியும். அதற்கு, வூஹான் நகரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த பிப்ரவரியில் நோய் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வூஹான் தற்போது நோயின் பிடியிலிருந்து மீண்டுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் 3 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் அங்கு இயல்புநிலைக்கு திரும்ப உள்ளன, 14 லட்சம் மாணவர்கள் மீண்டும் கல்விக் கூடங்களுக்குத் செல்ல உள்ளனர். மேலும், சில கல்விக்கூடங்கள் இணையவழி கற்றல் அல்லது வகுப்பறைக்கு வந்து நேரடியாக கற்றல் என்ற இரண்டு வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பபடி இதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். பள்ளிக்கு சென்று நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் விசயங்களை விட கரோனா காலம் முழு உலகிற்கு கற்றுத்தந்துள்ள பாடம் மிக பெரியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்