நடுவரின் தவறான தீர்ப்பு காரணமாக, கால்பந்து போட்டியின் இரு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டை கலவரமாக மாறி, சுமார் 100 பேர் பலியானதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கினியா என்ற நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில், நடுவரின் தவறான தீர்ப்பு அளித்ததை அடுத்து, ஒரு தரப்பின் ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதனைத் தொடர்ந்து, மற்றொரு தரப்பின் ரசிகர்களும் மைதானத்தில் புகுந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், 100 பேர் பலியானதாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மைதானத்திற்குள் புகுந்து, சமாதானம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால், ரசிகர்கள் பலமாக மோதிக்கொண்டதால், பெரும் கலவரமாக மாறி, மைதானத்திற்கு வெளியே சாலைகளிலும் பரவியது. மேலும், மைதானம் அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வன்முறை காரணமாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை இறந்த உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, கினியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.