பிரான்ஸ் நாட்டில் விடுதலையான கைதியின் லாண்டரி பைக்குள் ஒளிந்து தப்பிய கைதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்களுடைய அலட்சியத்தால் தான் இந்த தவறு நடந்தது என சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கோர்பாஸ் என்ற சிறையில், தண்டனை முடிந்து விடுதலையான ஒரு கைதியின் லாண்டரி பைக்குள் மறைந்து பயங்கர குற்றங்கள் செய்த ஒரு கைதி தப்பித்துவிட்டதாக வெளியாகி இருந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய கைதிக்கு 20 வயதுதான் என்றும், ஆனால் குற்றக் கும்பலுடன் தொடர்புகள் இருந்ததால் தண்டனை அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறை அதிகாரிகள் தங்களுடைய அலட்சியத்தை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதே நேரத்தில் 750 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்தச் சிறையில் 1200 கைதிகளை வைத்திருக்கிறார்கள் என்றும், அதிகப்படியான கைதிகளை குறைந்த அதிகாரிகளை கொண்டு கவனிப்பது சவாலாக இருக்கிறது என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், "எங்கள் நிர்வாகத்தில் இதுபோன்ற அலட்சியம் இதுவரை இருந்ததில்லை" என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தப்பியோடிய கைதியை பிடிக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்த கைதியைப் பிடித்து விடுவோம் என்றும் பிரான்ஸ் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.