திரைப்பட ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்க வைத்த பாகிஸ்தான் அரசு

திங்கள், 19 டிசம்பர் 2016 (13:01 IST)
இந்திய சினிமாப் படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் நீக்கியதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


 

காஷ்மீரின் உரி ராணுவத் தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், இரு நாடுகளுக்கு இடையே இயல்புநிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு தடைவிதிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் சினிமாத் துறை, அங்கு இந்திய சினிமாக்கள் (குறிப்பாக இந்தித் திரைப்படங்கள்) திரையிடுவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானில் அனைத்து இந்தியத் தொலைக்காட்சி சானல்களுக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இந்திப்படங்கள் பார்ப்பவர்கள் அதிகம். இதனால், இந்த அறிவிப்பால் சினிமா ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பாகிஸ்தானில் இந்தி திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் சினிமா வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய சினிமா படங்களுக்கு விதித்த தடையை நீக்கி மீண்டும் திரையிட பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. எனவே, இன்று திங்கட்கிழமை [19-12-16] முதல் பாகிஸ்தானில் இந்திய சினிமா படங்கள் திரையிடப்படுகிறது. இதனால், சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்