இந்தியத் திரைப்படங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான் !

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (10:19 IST)
பாலகோட் தாக்குதலின் எதிர்வினையாக இந்தியத் திரைப்படங்களை பாகிஸ்தானில் தடை விதிக்க அந்நாட்டு திரையரங்க சங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். இந்தத் தாக்குதலால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. அதையடுத்து பாகிஸ்தானுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா நேற்று தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 300 தீவிரவாதிகளும் அவர்களின் முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு எதிராக சில முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமாக இந்தியத் திரைப்படங்களை இனி பாகிஸ்தானில் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என அந்நாட்டு திரையரங்கங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான சவுதரி ஃபவாத் ஹுசேன் தனது டிவிட்டரில் ’இந்தியப் சினிமாக்களைப் புறக்கணிக்க திரையரங்குகள் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், ‘மேட் இன் இந்தியா’ விளம்பரங்களைப் புறக்கணிக்கும்படியும் அரசு சார்பில் அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் மிகப்பெரிய சந்தை இருப்பதால் இந்த முடிவால் விரைவில் வெளியாக இருக்கும் இந்தி படங்களின் வியாபாரம் பாதிப்படையக் கூடும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்