காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் இந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வர்த்தகத்திற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கி ஏற்றுமதி இறக்குமதியில் அதிக கெடுபிடிகள் காட்டி வருகிறது. மேலும் பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் முறையீடு செய்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த இக்குழுவின் சந்திப்பில் ’பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுத்து நிறுத்தும் கடமையில் பாகிஸ்தான் அரசு மிகவும் அலட்சியமாக இருந்து வருகிறது. வரும் மே மாதத்துக்குள் பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், எங்களது அமைப்பின் கருப்பு பட்டியலில் அந்நாட்டை வைக்க நேரிடும்.’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி எதையும் பெற முடியாது. ஏற்கனவே ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.