விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.
விண்வெளியில் பயணிக்கும் பல விண்கற்கள் பூமியை நோக்கிய பாதையில் பயணிப்பதும், இதனால் அவ்வபோது பூமிக்கு அபாயம் விண்கற்களால் நேருமா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு பூமிக்கு விண்கற்களால் ஆபத்து இல்லை என்றாலும், எதிர்காலத்தில் அப்படியான நிலை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாசா இறங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்காக டார்ட் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. நிலவை விட இரண்டு மடங்கு தொலைவில் உள்ள டிமொர்போஸ் விண்கல்லை நோக்கி பயணித்த டார்ட் விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை 3 மணியளவில் டிமொர்போஸை வெற்றிகரமாக தாக்கியது. இந்த தகவலை உறுதிபடுத்திய நாசா, டார்ட் விண்கல்லை தாக்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. நாசாவின் இந்த வெற்றி எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனை தரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.