இந்தியா தனது 79-வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், டெல்லியில் உள்ள செங்கோட்டை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்ற உள்ளதால், செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்கள் செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், டெல்லியில் கூலி வேலை செய்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செங்கோட்டைக்குள் ஏன் நுழைய முயன்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் வங்கதேசத்தின் ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையை தொடர்ந்து, அவர்களை வங்கதேசத்திற்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.