திவாலானது லடாம் ஏர்லைன்ஸ்: அதிர்ச்சியில் சக விமான நிறுவனங்கள்!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (11:45 IST)
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார வீழ்ச்சியால் லத்தீன் அமெரிக்காவின் பெரும் விமான நிறுவனமாக லடாம் ஏர்லைன்ஸ் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவில் புகழ்பெற்ற பெரும் விமான சேவை நிறுவனமாக இருப்பது லடாம் ஏர்லைன்ஸ். முக்கியமாக சிலி, பெரு, பராகுவே, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் அதிகமான விமான சேவைகளை அளித்து வருகிறது இந்நிறுவனம். பயணிகள் விமானம், சரக்கு விமானம் என நாளொன்றுக்கு 26 நாடுகளின் 145 பகுதிகளுக்கு சுமார் 1,400 விமானங்களை இயக்கி வந்தது லடாம் ஏர்லைன்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனத்துடன் சிலியின் குவெட்டோ நிறுவனங்கள் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்குதாரராக உள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸால் உலகமே முடங்கியுள்ள சூழலில் லடாம் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் பொருளாதார ரீதியான இழப்பையும் லடாம் சந்தித்துள்ளது. இதனால் லடாம் நிறுவனத்தின் மீதான கடன்சுமையும் அதிகரித்ததால் தனது விமான சேவை அளவை குறைத்து கொண்டதுடன், ஊழியர்கள் பலரையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளனர்.

மீண்டெழ முடியாத சூழலில் தற்போது லடாம் நிறுவனம் அமெரிக்காவில் திவாலவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஊரடங்கு முடிந்து சில மாதங்களுக்கு இதன் விமான சேவைகள் சில இடங்களில் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் சம்பவம் மற்ற விமான நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்