உணவில் விஷம் கலந்து ஐ.எஸ். தலைவரை கொல்ல முயற்சி

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (16:31 IST)
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிசிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
சிரியா, இராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து “இஸ்லாமிய அரசு” எனும் புதிய நாட்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக்கி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். தனிநாட்டை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல கொடூர சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தலைவரை உணவில் விஷம் கலந்து கொலை முயற்சி நடந்ததாக இராக்கில் இருந்து வெளிவரும் பல்வேறு அரேபிய செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
 
அதில், ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியும், இவரது மூன்று உதவியாளர்களும் இராக்கின் நைன்வேக் பீ ஆஜ் மாவட்டத்தில் தங்கியிருந்த போது மதிய உணவு சாப்பிட்டனர்.
 
இதனால், அவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது தான் உணவில் யாரோ விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது யார் என்பது குறித்து பலரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் பலமுறை காயங்களுடன் தப்பிய பாக்தாதியை, உயிருடனோ, பிணமாகவோ பிடித்தாலோ, இருப்பிடம் குறித்த தகவல் தெரிவித்தாலோ 10 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்