டொனால்டு ட்ரம்பா? ஜோ பிடனா? இந்தியாவிற்கு நன்மை பயக்கும் அதிபர் யார்?

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:09 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடன் நாளை பதவியேற்க உள்ள நிலையில் புதிய அதிபரின் வருகை இந்தியாவுடனான உறவில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் பெருவாரியான மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். எனினும் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ளாத நடப்பு அதிபர் ட்ரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார்.

நாடாளுமன்ற தாக்குதல்;

இந்நிலையில் கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த அதிபராக ஜோ பிடனை நியமிப்பது குறித்த கேபினேட் கூட்டத்தின்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரம் செய்தது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமைப்பான க்யூ அனான் தலையீடு இதில் இருப்பதாக வெளிப்படையாக தெரிய வந்த நிலையில் அதிபர் ட்ரம்ப்பே தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விலக சம்மதித்தார். அதை தொடர்ந்து நாளை ஜோ பிடன் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

ட்ரம்ப்பின் இந்திய உறவு:

2017 முதல் 2020 வரையிலான 4 ஆண்டுகளில் அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு நிலை அரசியல் ரீதியாக வலுவான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துக் கொள்ளும்போது ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. மேலும் ஆயுதங்கள் விற்பனையில் அமெரிக்காவிடமிருந்து கணிசமான ஆயுதங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


அதேசமயம் அரசியல் ரீதியான உறவுகள் அளவிற்கு பொருளாதார, குடிபெயர்வு உறவுகள் வலிமையானதாக இருக்கவில்லை. ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா உள்ளிட்டவற்றில் ட்ரம்ப் அரசு காட்டிய கடுமையான கட்டுப்பாடுகள் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பிரச்சினையாகவே இருந்தன என தெரிகிறது.

இதுதவிர ஏனைய நாடுகளுடன் ட்ரம்ப் அரசு கொண்டிருந்த உறவு நிலையே அரசியல் விமர்சகர்களால் சிக்கலானதாக வரையறுக்கப்படுகிறது. இந்தியா அமெரிக்காவிடம் ஆயுதங்கள் கொள்முதலில் இருந்த நிலையில் பிற நாடுகளிடமும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவின் முடிவிற்கு ட்ரம்ப் அரசு அதிருப்தியே காட்டியது. மெக்ஸிகோ – அமெரிக்கா இடையே சுவர் கட்டுவதில் சொந்த கட்சியினர் எதிர்த்துமே தீர்மானமாக இருந்தது பலருக்கு அதிருப்தியை அளித்தது.

மேலும் ஈராக் மீதிருந்து ஒபாமா காலத்தில் விலக்கப்பட்ட பொருளாதார தடையை மீண்டும் விதித்தது. க்யூபா மீது பொருளாதாரத்தடை, சீனாவுடன் பொருளாதார – அரசியல்ரீதியான மோதல்கள் என அமெரிக்காவின் பிற நாட்டு உறவுகள் மோசமானதாக இருந்ததாக தெரிகிறது.

ஜோ பிடன் இந்தியாவிற்கு நெருக்கமானவரா?

ஜோ பிடன் அமெரிக்க தேர்தலில் பங்கேற்ற சமயம் அவரது மூதாதையர் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் மெட்ராஸ் வந்து தங்கியிருந்து இங்கிருந்த ஒரு பெண்ணை மணம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதுகுறித்த சரியான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் ஜோ பிடனின் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்க இந்தியர்களுக்கு ஒரு வாய்ப்பாக கமலா ஹாரிஸ் இருந்தார். தமிழகத்தை பூர்வீகமாக சேர்ந்த கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என தேர்தல் சமயத்தில் பல இடங்களில் கோவில்களில் பூஜைகளும் செய்யப்பட்டன.

இந்திய பூர்வீகம் என்றாலும் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலாஹாரிஸ் அகதிகள், கறுப்பின மக்களின் உரிமைகள் உள்ளிட்ட முற்போக்கான அமெரிக்க சமுதாயத்திற்கான குரலாக தொடர்ந்து ஒலித்து வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஜனநாயக கட்சியே அமெரிக்காவில் மாற்றத்தை விரும்பும் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. ஜனநாயக கட்சி சார்பில்தான் அமெரிக்காவின் முதல் கறுப்பினத்தை சேர்ந்த அதிபராக பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் அகதிகள் உரிமைகள் மட்டுமல்லாது வெளிநாட்டிலிருந்து பணி நிமித்தம் அமெரிக்கா வரும் ஊழியர்கள் அவர்தம் உரிமைகளுக்கு ஜனநாயக கட்சி மதிப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா – இந்தியா இடையேயான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு அவசியமானதாக உள்ளது. சமீபத்தில் நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி “அமெரிக்காவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” என கூறியதன் மூலம் மறைமுகமாக ஜனநாயக கட்சிக்கான ஆதரவை பதிவு செய்ததாகவே கருதப்படுகிறது.

மேலும் ஜோ பிடன் அமைத்த கொரோனாவுக்கு எதிரான மருத்துவ குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செலின் கவுண்டர் உள்ளிட்ட பல இந்திய வம்சாவளிகளும் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஜனநாயக கட்சியே இந்தியாவிற்கு நெருக்கமான கட்சியாக மக்களுக்கு தோன்றுகிறது. அதிபர் ட்ரம்ப் போல அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே போன்ற கொள்கைகளை தாண்டி ஜோ பிடன் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா – இந்தியா இடையேயான அரசியல் உறவுகளை தாண்டி பொருளாதார உறவுகளும் வலுப்பட வேண்டிய சூழலில் நாளை ஜோ பிடனின் பதவியேற்பு இந்தியாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்