பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் பல கண்ட திட்டுகள் மீது அமைந்துள்ளன. இந்த கண்டத்திட்டுகள் (புவி தகடுகள்) மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இரு கண்ட திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகின்றது. சமீபமாக துருக்கி, சிரியா பகுதியில் இவ்வாறாக கண்டத்திட்டுகள் நகர்ந்ததால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். நேற்று ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதியில் தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் வடக்கிழக்கில் அதிகாலை 05.02 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் டோபேலா நகரத்திற்கு வடக்கே 177 கி.மீ தூரத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.