அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கவிருந்த போரைத் தான் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த புகழ்பெற்ற கூற்றை அவர் 50வது முறையாக கூறி சாதனை படைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான இந்த பதற்றமான சூழலை தான் கையாண்டதாக கூறினார். வரி விதிப்பு முறை எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும்போது, "நான் வரி விதிப்பு நடவடிக்கையை பயன்படுத்திதான் போரை நிறுத்தினேன். அவர்கள் போருக்கு தயாராகவே இருந்தனர்," என்று அவர் குறிப்பிட்டார். வரி விதிப்பை பயன்படுத்தி வெறும் டாலர்களை மட்டுமல்ல, உலகளவில் அமைதியையும் கொண்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தானுடனான மோதல் தணிய, எந்தவொரு மூன்றாம் நபரின் தலையீடும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய பின்னரே போர் பதற்றம் தணிந்ததாக கூறப்படுகிறது.