தமிழர்களை பொறுத்தவரை, கட்டிபிடிப்பது என்பது கலாச்சார சீர்கேடாக பார்க்கப்படுகிறது. தமிழர்கள் தங்களின் மூத்தவர்களுகோ, அல்லது தங்களின் குருக்களுக்கோ மரியாதை செலுத்தும் வகையில் காலில் விழுந்து தொழுவது, காலந்தொட்டு வரும் பண்பாடாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அப்படி காலில் விழுந்து தொழுவது, உடலளவில் பெரும் நன்மை விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு தமிழர்கள் மட்டுமின்றி , உலகத்தில் வாழந்துவரும் பல்வேறு இனக்குழுக்களும், தங்களின் மரியாதையை வெளிப்படுத்த பல்வேறு வழக்கங்களை வைத்திருக்கிறார்கள், இந்நிலையில் தற்போது, அமெரிக்காவை சேர்ந்த உளவியல் ஆராய்ச்சி மையம் ஒன்று, மரியாதை செலுத்தும் வகையில் கட்டிபிடித்தால் உளவியல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.
நமது மனைவி அல்லது கணவனையோ, தனது குழந்தைகளையோ அல்லது தனது நண்பர்களையோ, அவர்களை வரவேற்கும் வகையிலோ அல்லது அவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் வகையிலோ கட்டிப் பிடித்தால், அந்த அரவணைப்பு அவர்களை சாந்தப்படுத்தி, அவர்களின் மனதில் உள்ள தீய எண்ணங்களையோ, அல்லது கோபங்களையோ கரைந்துப்போகச் செய்து, நல்ல எண்ணங்களையும், மகிழ்ச்சியையும் விதைக்கும் எனவும் அந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கட்டிபிடித்து அரவணைப்பதால், எதிர்மறை எண்ணங்கள் மாறும் எனவும், மேலும் தனிமையால் விரக்தியில் இருப்பவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
தமிழில் வெளியான ஒரு திரைப்படத்தில், கதாநாயகன் ”கட்டிபிடி வைத்தியம்” என்ற பெயரில் கோபம் அடைபவர்களை கட்டிபிடித்து சமாதானம் செய்வது போல் சில சாட்சிகள் இடம்பெறும். அப்படிப்பட்ட காட்சிகள் கற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தாலும், ஓரளவுக்கு அதில் உண்மையும் இருப்பதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.