இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.
தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.