போக்கிமோன் கோ விளையாடுவதற்காக வேலையை விட்ட இளம்பெண்

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (16:36 IST)
போக்கிமோன் கோ விளையாட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரி ஆகிவிடும் ஆசையில் ஆசிரியை வேலையை விட்டுள்ளார் ஒருபெண்.


 


வடக்கு லண்டனில் உள்ள ஹை பார்னெட் பகுதியை சேர்ந்த சோபியா பெட்ரெஸா(26) என்னும் அந்தப் பெண், போக்கிமோன் மூலம் அதிக பாயின்ட்களை சம்பாதித்து பெரிய லெவலுக்கு போன பின்னர் தனது கணக்கை வேறொருவருக்கு விற்பதன் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரி ஆகிவிடலாம் என்று நம்புகிறார்.

இதற்காக, பல்வேறு பெயர்களில் கணக்குகளை தொடங்கி போக்கிமோன் கோ விளையாடிவரும் இவர், சிலநாட்களில் தினமும் 18 மணிநேரம் வரை இந்த விளையாட்டில் மூழ்கிப் போகிறார். இந்த விளையாட்டுப் பித்தைப் பற்றி ஆரம்பத்தில் சலித்துகொண்ட இவரது தாயார்கூட, இதில் வருமானத்துக்கும் வாய்ப்புள்ளது என்று தெரியவந்த பின்னர், மவுனமாகி விட்டதாக சோபியா கூறுகிறார்.

’இந்த விளையாட்டின் மீது மக்களுக்கு உள்ள மவுசு குறைந்துப்போய், மதிப்பு மங்கும்போது நான் மீண்டும் ஆசிரியை வேலைக்கு திரும்பி விடுவேன். அதுவரை ஒருகை ஆடித்தான் பார்ப்போமே.’ என்று உற்சாகமாக கூறுகிறார், சோபியா.

குதிரை ரேஸ் பைத்தியம்போல் பலரை இந்த போக்கிமோன் கோ பித்தர்களாக அலைய வைத்து வருகிறது. பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை ஏலம் விடுவதற்கான வசதியை ‘இபே’ உள்ளிட்ட இணைய ஏல நிறுவனங்கள் வழிவகுத்து தந்துள்ளன.

’லெவல்-20’ அளவில் உள்ள கணக்குகள் சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை இங்கு ஏலம் விடப்படுகிறது. இதை பலரும் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் ஒருவரது கணக்கின் பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் சுமார் 6.50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த போக்கிமோன் ரசிகரான டாம் க்யூரி (24), என்பவர் இந்த கேமுக்கு அடிமையானதால் தனது வேலையை கடந்தவாரம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்