சமீபத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் மெட்டல் மோனோலித் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் ரொட்டியால் செய்யப்பட்ட மோனோலித் தோன்றியுள்ளது.
சமீபத்தில் உலகின் சில நாடுகளில் உலோகத்தால் செய்யப்பட்ட மோனோலித் என்ற தூண் திடீரென பல இடங்களில் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்தன. இது ஏலியன்களின் வேலையாக இருக்கலாம் என்று சதிகோட்பாட்டளர்கள் நம்பினர்.
இந்நிலையில் மெட்டல் மோனோலித்தை சில இடங்களில் நிறுவியது தாங்கள்தான் என சிலர் தாமாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது, ஆனாலும் இந்த மோனோலித்துகள் தோன்றியதில் ஏதோ மர்மம் உள்ளது என பலரும் நம்பி வருகின்றனர்.
இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பார்க் ஒன்றில் 7 அடி உயரமுள்ள ரொட்டியால் செய்யப்பட்ட மோனோலித் தோன்றியுள்ளது. கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவில் தோன்றிய இது, கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாளில் உடைந்து விழுந்தது. இதை கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்றும், சான் பிரான்சிகோவில் உள்ள பேக்கரிக்காரர் யாரோ ஒருவரின் குறும்பு செயலாக இருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.