இத்தாலியில் சர்க்கஸ் பயிற்சியாளர் ஒருவரை புலிகள் கொன்றுவிட்டு அவர் இறந்தது கூட தெரியாமல் அவருடன் விளையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன விலங்குகளை சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்துவதில் பல ஆபத்துகள் உள்ளன. அதனால் பல நாடுகளில் சர்க்கஸில் வன உயிரினங்களை பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. இருந்தாலும் இத்தாலி போன்ற சில நாடுகளில் இன்னும் அதற்கான சட்டங்கள் எதுவும் வரவில்லை.
இத்தாலியில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவர் எட்டோர் வெபர். அந்த சர்க்கஸில் உள்ள நான்கு புலிகளுக்கும் இவர்தான் பயிற்சியாளர். வெளியே புலிகளாய் தெரிந்தாலும் வெபரிடம் பூனைப்போலவே கொஞ்சி விளையாடின அந்த புலிகள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் புலிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக கூண்டுக்குள் சென்றார் வெபர். அப்போது ஒரு புலி விளையாட்டாக அவர் மேல் தாவ, அதை பார்த்து மற்ற புலிகளும் அவர் மேல் தாவின.
திடீரென ஆக்ரோஷமடைந்த புலிகள் தங்களுக்குள் சண்டை போட்டபடி வெபரையும் கடித்து குதறிவிட்டன. இதில் வெபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது தெரியாமல் கீழே கிடந்தவரை எழுப்பிவிட அந்த புலிகள் முயற்சித்து கொண்டிருந்தன. காவல்துறையினரும், சர்க்கஸ் பணியாளர்களும் எவ்வளவு முயற்சி செய்தும் புலிகள் அவரது உடலை விட்டு விலகாமல் தொடர்ந்து விளையாடியபடியே இருந்துள்ளன.
வெபர் இறந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அவரை கொன்றுவிட்டது கூட தெரியாமல் விளையாடி கொண்டிருந்த புலிகளை நினைக்கையில் பலர் வருந்தினர்.