உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் சர்வதேச மருத்துவ பத்திரிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பெரும் தொற்றாக மாறி பல லட்சம் உயிர்களை பலி கொண்டுள்ளது. மேலும் பல லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகும் கொரோனா பாதிப்புகளால் உலக நாடுகள் பல அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் லென்செட் மருத்துவ பத்திரிக்கையில் சீனாவின் வூகான் மருத்துவ ஆய்வாளர்கள் குழு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த கட்டுரையில் சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் புதிதாக 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது, அவர்களை சோதித்ததில் அந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளிடமிருந்து இவர்களுக்கு பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனாவால் மீண்டு இரண்டாவது சுழற்சியாக கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மக்களை காத்துக் கொள்ள முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை செய்தாலும் கொரோனா பரவலை தடுத்துவிட முடியாது. கொரோனாவை தடுக்க சரியான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை கொரோனா பாதிப்பு தொடர்கதையகா இருக்கும் என தெரிவித்துள்ளனர்.