அமெரிக்கா - சீனா இடையே வரிவிதிப்பு மோதல் உச்சமடைந்து வரும் நிலையில் அமெரிக்க விமானங்களுக்கு சீனா விதித்துள்ள தடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளிடையே பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தினார். அதன்படி, இந்தியாவுக்கு 27 சதவீதம், சீனாவுக்கு 54 சதவீதம் என அவர் வரிகளை உயர்த்திய நிலையில், சீனா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.
முக்கியமாக சீனா ஒரு படி முன்னே போய் அமெரிக்காவிற்கு பதில் வரி விதித்தது. இதனால் சீனா தவிர மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா, சீனாவுக்கு மட்டும் 104 சதவீதமாக வரியை உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு சீனா 125 சதவீதம் வரியை விதிக்க, பதிலடியாக அமெரிக்கா சீனாவுக்கு 145 சதவீதம் விதிக்க, இப்படியே இரு நாடுகளிடையே வர்த்தக மோதல் தொடர்ந்து வருகிறது.
இதன் அடுத்தப்படியாக அமெரிக்க நாட்டின் விமான தயாரிப்பான போயிங் நிறுவனத்தின் விமானங்களை வாங்கக் கூடாது என சீன விமான நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளில் போயிங் விமானங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த தடை அமெரிக்காவிற்கு பெரும் இடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்க என்ன பதிலடியாக செய்யப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K