அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் 2024ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்போதிருந்தே பல மாகாணங்களில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டில் இதேபோல ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவர் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஆபாச பட நடிகையின் வாயை மூடுவதற்காக ட்ரம்ப் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததாகவும், அது பிரச்சார நிதி பணம் என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை விவகாரத்தில் ட்ரம்ப் எப்போது வேண்டுமானாலும் கைது ஆகலாம் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை அமெரிக்க போலீஸ் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்து செல்வது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதுபோல அமெரிக்க சிறைச்சாலையில் ட்ரம்ப் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளது. பார்ப்பதற்கு உண்மையான புகைப்படங்கள் போலவே தோன்றும் இவை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. எனினும் இதை பலர் ஷேர் செய்து கற்பனை படமாக இருந்தாலும் உண்மையில் நடந்தால் இது போலதான் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.