தாயை உயிரோடு புதைத்த மகன்! – 3 நாட்கள் கழித்து உயிரோடு வந்த தாய்!

Webdunia
சனி, 9 மே 2020 (09:21 IST)
சீனாவில் முடக்குவாதம் வந்த தாயை மகனே புதைத்த நிலையில் தாய் உயிருடன் திரும்பிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜிங்பியான் நகரை சேர்ந்தவர் மா. இவரது தாய் வாங் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரை குணமாக்க நீண்ட நாட்களாக பல மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார் மா. ஆனால் அவரது பக்கவாதம் குணமாகவில்லை.

ஒருநாள் தனது தாயை அழைத்து கொண்டு வெளியே சென்ற மா, தான் மட்டும் திரும்ப வந்துள்ளார். இதுகுறித்து அவர் மனைவி கேள்வி கேட்டதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லை. மூன்று நாட்களுக்கு மேலாகியும் தனது மாமியார் திரும்ப வராததை கண்டு சந்தேகமுற்ற மா-வின் மனைவி இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மா-வை போலீஸார் விசாரித்த போது தன் தாய்க்கு குணமாகாததால் அவரை ஒரு இடத்தில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவர் தனது தாயை புதைத்த இடத்தில் போலீஸார் சென்று பார்த்தபோது முழுமையாக மூடப்படாத குழியில் வாங் முனகியபடி கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார் மா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதைக்கப்பட்ட நிலையிலும் வாங் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்