இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாட்டின் பழமையான செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிஸில் அதிகபட்சமாக, 187 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முன்பு 1966ம் ஆண்டு 194 சென்டிமீட்டர் அளவில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் 50 வருடங்களுக்கு பின் மீண்டும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், செயின்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பேராலயத்தில், ஒரு மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக , அங்குள்ள பழமையான பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.