5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை!

சனி, 2 நவம்பர் 2019 (15:41 IST)
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதன் கடைசியாகப் பயணித்த பாதையை, அவரை சுற்றி பனியில் உறைந்திருந்த தாவரங்களின் மூலம் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கு வழியான மலைத்தொடரில் பனி மனிதர் ஓட்ஸி ஏறியுள்ளார் என்ற முடிவுக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
 
கடல் மட்டத்திலிருந்து 3,210 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைகளுக்கு நடுவில் 1991ம் ஆண்டு இந்த பனிமனிதனின் உடல் மலையேறுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதயத்தில் இருந்து தூய ரத்தத்தை உடலின் பிற பாகங்களுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான தமனி ஒன்றில் அம்பு தாக்கியதில், அதிக ரத்தம் வெளியேறி அவர் சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவரது சடலம் பனிக்குள் புதைந்து, பாதுகாப்பாக இருந்தது. உலகில் பழமையான மற்றும் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட உடல்களில் (மம்மி) ஒன்றாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது.
1991ம் ஆண்டு வரை இந்த பனிமனிதனின் உடல் உறைந்த நிலையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் உயரமான இடத்திலேயே இருந்துள்ளது. அந்த உடலுக்கு அருகில் அதிக அளவிலான தாவரங்களும், பாசிகளும் உறைந்த நிலையில் இருந்துள்ளன.
 
அவரது குடல் மற்றும் ஆடைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பாசிகளும், ஈரப்பதமான பகுதிகளில் வாழும் சிறிய தாவரங்களையும் விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். குறைந்து 75 உயிரினங்களை சேர்ந்த இந்த பாசிகளிலும், தாவரங்களிலும் 30 சதவீதமே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன.
 
பிற 70 சதவீத பாசிகளும், தாவரங்களும் இன்றைய தென் டைரோலில் இனம் காணப்படலாம்.
 
இது பற்றி கருத்து தெரிவித்த கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பல்லுயிரின பெருக்க மையத்தைச் சேர்ந்த ஜிம் டிக்சன் "இந்தப் பாசிகளையும், சிறிய மற்றும் விதையில்லா பசுமை தாவரங்களையும் பற்றி பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை," என்று தெரிவித்தார்.
 
"இருப்பினும், பனி மனிதர் என அழைக்கப்படும் ஓட்ஸி பனியில் இருந்து அகற்றப்பட்டபோது கிடைத்த 75 சதவீதத்திற்கு குறையாத உயிரினங்களால் ஆய்வுக்கான முக்கிய துப்புகள் கிடைத்தன" என்று அவர் கூறுகிறார்.
 
"பனி மனிதன் ஓட்ஸியை சுற்றியிருந்த பனிக்கட்டியிலும், அவரது ஆடையிலும், அவர் வைத்திருந்த கோலிலும் இருந்து பெரும்பாலும் சிறிய துண்டுகளாக இவை மீட்கப்பட்டுள்ளன" என்கிறார் அவர்.
 
பனி மனிதன் கடைசியாக பயணம் மேற்கொண்ட பாதையை தெளிவாக கண்டறிய கிடைத்திருக்கிற சில பாசிகள் மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறியுள்ளார்.
இனம் காணப்பட்டுள்ள பல பாசி வகைகள் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கில் இன்று செழித்து வளருகின்றன.
 
ஃபிலட் நெக்கெரா என்று அழைக்கப்படும் காட்டில் வளரும் முக்கியமான விதையில்லாத தாவரம், பனி மனிதரின் ஆடையில் அதிக அளவிலும், அவரது குடலில் நுண்ணிய துகள்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
 
செப்புக் காலத்தைச் சேர்ந்த பனி மனிதன் அருகிலுள்ள மற்ற பள்ளத்தாக்குகளில் ஏறி சென்றிருக்கலாம் என்பதை விட, தெற்கிலிருந்து வடக்காக ஷ்னால்ஸ்டாலுக்கு ஏறி சென்றிருக்கலாம் என்பதை காட்டுவதற்கு இந்த கண்டுபிடிப்பும், கீழுள்ளது முதல் மிதமான உயரத்தில் காணப்படும் ஒரே மாதிரியான பாசிகளும் சான்றுகளாக உள்ளன.
 
இன்று பிரபலமான பனி சறுக்கு விளையாட்டு தலமாக விளங்குகின்ற அந்த பள்ளத்தாக்கை, இந்த பனிமனிதன் சென்றிருக்கும் பாதையாக உறுதிப்படுத்தியுள்ள முந்தைய மகரந்தங்கள் கிடைக்கும் இடங்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவை இந்த கண்டுபிடிப்பின் முடிவு வலுப்படுத்துகிறது.
 
சுமார் 157 சென்டிமீட்டர் உயரம் இருந்ததாக கருதப்படும் பனிமனிதன் ஓட்ஸி, 50 கிலோஎடை உடையுடையவராக இருந்திருப்பார் என்று நம்பப்படுகிறது.
 
கறுத்த, நீண்ட முடியையும், பழுப்பு நிறக் கண்களை கொண்டிருந்த அவர் தாடி வைத்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
பனிமனிதன் ஓட்ஸி இறந்தபோது அவருக்கு வயது 45 ஆக இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்