மேலும் 100 மாணவிகளுக்கு விஷம்; கண்டுகொள்ளாத அரசு! – வீதிகளில் இறங்கிய ஈரான் மக்கள்!

திங்கள், 6 மார்ச் 2023 (08:47 IST)
ஈரானில் பள்ளி செல்லும் பெண்களுக்கு விஷம் கொடுக்கும் சம்பவம் தொடர்கதையாகி உள்ள நிலையில் தற்போது மேலும் 100 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவர்கள் பள்ளி செல்லவும், கல்வி பயிலவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நாட்டை சேர்ந்த பழமைவாத அமைப்புகள் பல பெண்களுக்கு கல்வி வழங்குவதை எதிர்த்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி சென்ற மாணவிகள் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோதனையில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மாணவிகள் பள்ளி செல்வதை எதிர்க்கும் பழமைவாதிகளின் செயலாக இது கருதப்படுகிறது.

இதை கண்டித்து அப்போதே நாடு முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் தற்போது வெவ்வேறு மாகாணங்களில் சுமார் 100 மாணவிகள் விஷம் வைக்கப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவிகள் பலர் டெஹ்ரானில் உள்ள கல்வி அமைச்சகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இது வெளிநாட்டு சதி என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால் எந்த நாடு எதற்காக செய்தது உள்ளிட்ட விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்