மிகவும் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்ய !!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (17:41 IST)
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதைகள் (தனியா) - 4 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 4  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 8
புளி - சிறிய எலுமிச்சைபழ அளவு
நல்லெண்ணெய் - 10 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள் - சுவைக்கேற்ப
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம்  - கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பற்கள் - 20
தக்காளி - 1
வெந்தயம் - கால் தேக்கரண்டி
வர மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1  சிட்டிகை
கொத்தமல்லித் தழை - சிறிதளவு



செய்முறை:

10 கத்தரிக்காய்களை நடுவில் கீரி விட்டு 10 நிமிடங்களுக்கு தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். மசாலா அரைப்பதற்கு  ஒரு பானில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காய்களை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்துவிட்டு தயார் செய்துள்ள மசாலாவை அதில் நிரப்பவும். ஊறவைத்துள்ள புளியில் கொட்டை,  நார், போன்றவற்றை நீக்கிவிட்டு கரைத்துக்கொள்ளவும்.  அதனுடன் மீதமுள்ள அரைத்த மசாலா விழுது சேர்க்கவும். கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி சாம்பார் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

ஒரு பானில் 4-5  தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும், கத்தரிக்காய்களை சேர்த்து வதக்கவும். பிறகு ஒரு வானலியில் 4-5 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,  எண்ணெய் சூடானதும் அரைதேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி சீரகம்,  சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 10  சின்ன வெங்காயம், 20 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு  தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

பின்னர் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறவும்.  புளிக்கரைசலை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். ஒரு சிறிய கடாயில்  கால் தேக்கரண்டி வெந்தயம், 2  காய்ந்த மிளகாய்,  ஆகியவற்றை சேர்த்து வறுத்து, 1 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

குழம்பு கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும்,  வெந்தயப் பொடி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்