அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சந்தித்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அறிய உலக நாடுகள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன.
சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா என்ற ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் 45 நிமிடங்கள் ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, 'வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்று டிரம்ப் கூறினார்.
இந்த சந்திப்பு பல தடைகளை உடைத்து நடந்துள்ளதாகவும், இந்த சந்திப்பால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் என தான் நம்புவதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்தார். முதல்கட்ட சந்திப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் மீண்டும் இருதலைவர்களும் சந்தித்து பேசவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.