தனுஷ் கதையை ரஜினி நிராகரித்தது ஏன்? வெளியான தகவல்!

வெள்ளி, 19 ஜூன் 2020 (08:27 IST)
தனுஷ் இயக்க இருக்கும் நான் ருத்ரன் படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ரஜினியைதான் அணுகினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் எழுதுதல், பாடகர், இயக்குனர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர் தனுஷ். இவர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பவர் பாண்டி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்க ஆயத்தமானார். இந்த படத்தில் அவரோடு நாகார்ஜூனா, சரத்குமார், அதிதி ராவ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த்  ஆகியோர் நடிக்க இருந்தனர். ஆனால் மெர்சல் படத்தால் பல கோடி நஷ்டமடைந்த தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த படத்தைத் தயாரிக்க முடியாத நிலைக்கு ஆளானது.

இதையடுத்து இருவருடங்களாக தொடங்கப்படாமல் இருந்த அந்த படம் இப்போது மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தற்போது தற்காலிகமாக 'DD 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படம் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ரஜினியைதான் முதலில் தனுஷ் அனுகியதாக சொல்லப்படுகிறது. முழுக்கதையையும் கேட்ட ரஜினி நிறைய சண்டைக் காட்சிகள் இருப்பதால் இளமையான கதாநாயகன் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்