அன்று நரேந்திர மோடி, இன்று அபிநந்தன் – விவேக் ஓபராயின் அல்டிமேட் அவதாரம்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (17:41 IST)
பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் பாலகோட் தாக்குதலையும், விமானி அபிநந்தனையும் மையப்படுத்திய ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமாவில் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அப்போது பாகிஸ்தான் விமானங்களை சிதறி ஓட செய்தவர் இந்திய விங் கமாண்டர் அபிநந்தன். துரதிரிஷ்டவசமாக விமானம் பழுதடைந்து பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் விழுந்ததால் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.

பாகிஸ்தான் அதிகாரிகளின் கேள்விக்கு பயப்படாமல் நெஞ்சுரத்துடன் அபிநந்தன் பதில் சொன்னது இந்திய மக்களிடையே அபிநந்தனை ஒரு ஹீரோவாக மாற்றியது. தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனின் கொடுவா மீசை ஸ்டைலை இந்தியாவெங்கும் பலர் வைத்து கொண்டார்கள்.

புல்வாமா தாக்குதல், பாலகோட் தாக்குதல், அபிநந்தன் சிறைப்பிடிப்பு ஆகிய சம்பவங்களை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தை தானே தயாரித்து, நடிக்கவும் இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்தி நடிகர் விவேக் ஓபராய்.

ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கை வரலாறு படத்தில் மோடியாக நடித்திருந்த விவேக் ஓபராய் இப்போது இந்த படத்தின் மூலம் விங் கமாண்டர் அபிநந்தனாக நடிக்க இருக்கிறார். இதற்கான உரிய அனுமதிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விவேக் ஓபராய் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்