விவேக் பேச்சால் சிவாஜி ரசிகர்கள் கோபம் – டிவிட்டரில் விளக்கம் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (13:48 IST)
பிகில் படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவின் போது விவேக் பேசிய சில விஷயத்தால் சிவாஜி ரசிகர்கள் கோபமடைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் விவேக் சிவாஜியின் பிரபலமான பாடலான நெஞ்சில் குடியிருக்கும் என்ற வார்த்தை விஜய்யால் இப்போது மந்திரம் போல ஒலிக்கத் தொடங்கியுள்ளது எனக் கூறினார். மேலும் அப்போது அந்த பாடல் பிரபலமாகவில்லை எனவும் கூறினார்.

இதனால் அதிருப்தியடைந்த சிவாஜி ரசிகர்கள் அதிருப்தியடைந்து கணடன அறிக்கையை வெளியிட்டனர். அதில் ‘‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், 1960ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி - வைஜெயந்தி மாலா நடித்த 'இரும்புத்திரை' படத்தின் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார்.

மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறில்லை. ஆனால், ஒரு நடிகரைக் காக்காய் பிடிப்பதற்காக ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலைக் கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏதோ இப்போது தான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவது போலக் கூறியுள்ளார். 'நெஞ்சில் குடியிருக்கும்' என்ற 1960-ல் வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் எனக் கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசியிருக்கிறார் விவேக். ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் 'பராசக்தி' படத்தில் வரும் நீதிமன்றக் காட்சி வசனத்தைப் பேசிக் கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜியின் அருமையான பாடலைப் பொது மேடையில் விவேக் கிண்டலடித்திருக்கிறார். இது போலத் தொடர்ந்து செய்தால், அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நடிகர் விவேக் இன்று தனது டிவிட்டரில் தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ‘ 1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்