சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரத்தில் பேச ஆரம்பித்தாரோ, அந்த நேரம் முதல் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் எளிதில் வெற்றி வாகை சூடிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த சின்னசின்ன கட்சிகளுக்கு ரஜினியின் அறிவிப்பு பேரிடியாய் இறங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது ஏற்புடைய கருத்து அல்ல. தமிழ்நாட்டில் கார், பங்களா, புகழ், பணம் என்று அனைத்தையும் இதே சிஸ்டத்துக்குள் இருந்து தானே ரஜினி சம்பாதித்தார். அப்படியானால் அவர் சம்பாதித்த பல நூறு கோடியை சிஸ்டம் சரியில்லாததால் அரசிடம் திருப்பி ஒப்படைப்பாரா?
அவர் நடித்த படம் வெளியாகும் போது 1 டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1000 ரூபாய் கொடுத்து மக்கள் வாங்கி பார்த்தார்களே? சிஸ்டம் சரியில்லை எனவே அதிக ரூபாயில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள் என்று அப்போது சொன்னாரா?. அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் சினிமா டிக்கெட் வாங்க வேண்டும் என்று மக்களுக்கு ரஜினி சொல்வாரா? தமிழகத்தில் ஒரு பேச்சு, கர்நாடகாவில் ஒரு பேச்சு என்று தொழிலுக்காக மாற்றி பேசி பணம் சம்பாதிக்கும் ரஜினிக்கு சிஸ்டம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.