"'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படம் என் வாழ்க்கையின் அங்கம்"- நடிகர் பிருத்விராஜ்!

J.Durai
புதன், 20 மார்ச் 2024 (11:51 IST)
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ திரைப்படம்  28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை பிளெஸ்ஸி இயக்கியிருக்க பிருத்விராஜ் சுகுமாரன், அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
 
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
 
 அப்போது நடிகர் பிருத்விராஜ் பேசியதாவது,
 
 "இந்தப் படம் கிட்டத்தட்ட 16 வருடப் பயணம். 2008ல் இயக்குநர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, 'நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்' எனக் கூறினார். மோகன்லால் சார், மம்முட்டி சார் என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லோரும் பிளெஸ்ஸியுடன் ஒரு படமாவது செய்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியான முன்னணி இயக்குநர்தான் பிளெஸ்ஸி. அவர் ஒரு படத்திற்காக 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய கமிட்மெண்டை காட்டுகிறது. 2009 ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல பத்து வருடங்கள் ஆனது. ஏனெனில், மலையாள சினிமாவில் அதற்கான கேமரா, இன்னும் சில விஷயங்கள் அப்போது சாத்தியமே இல்லாமல் இருந்தது. படம் ஆரம்பிக்கும்போது யார் இசை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. ரஹ்மான் சார் மற்றும் ஹேன்ஸ் ஸிம்மர் இருவருடைய பெயர்கள் தான் நாங்கள் நினைத்திருந்தோம். ஹேன்ஸ் ஸிம்மர் அணியில் இருந்து எங்களுக்கு ரிப்ளை வந்தது. ஆனால், அந்த சமயத்தில் ரஹ்மான் சாரை எப்படித் தொடர்பு கொள்வது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. ரஹ்மான் சார் இசை மக்களுக்கு இன்னும் நெருக்கமானதாக இருக்கும் என நம்பினோம். பின்பு, அவரும் நாங்கள் பெரிதாக எதையோ செய்யப் போகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு சம்மதம் சொன்னார். அவர் பெயர் எங்கள் படத்துடன் சேர்ந்ததும் மக்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அவருக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
 
மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது. அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை கூடினேன். கேரளாவில் படப்பிடிப்பு முடித்த பின்பு ஏழெட்டு மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்கள். எனக்கு உடல் எடை குறைய பிளெஸ்ஸி அவகாசம் கொடுத்தார்.  பின்பு 2020ல் ஜோர்தான் சென்று படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்சம் நாட்களிலேயே, கொரோனா வந்ததால் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கினோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, இந்த படம் இனி நடக்குமா என எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு முறையான அனுமதி பெற்று நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அல்ஜீரியா, சஹாரா பாலைவனத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். பின்பு ஜோர்தான் சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாதவற்றை ஷூட் செய்தோம். பின்பு, கேரளா வந்தோம். 2022 இல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது. இந்தப் படத்திற்கு நான் ஓகே சொன்ன 2008 சமயத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது. சினிமாவுக்கு குறிப்பாக மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை. இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி. படத்தை தமிழகத்தில் டிஸ்ட்ரிபியூட் செய்ய ஒத்துக்கொண்ட உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் நன்றி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு. திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்" என்றார். 
 
 பாடலாசிரியர் சிநேகன், 
 
"வரலாற்று சிறப்புமிக்க இந்த மேடையில் இருப்பதற்கு நான் ரஹ்மான் சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். 'ஆடுஜீவிதம்' நாவல் நிறைய பேர் படித்திருப்போம். பல லட்சம் பிரதிகள் விற்பனையான அற்புதமான ஒரு கதை. பிருத்திவிராஜ் சார் சொன்னது போல மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு வாழ்வியல் களம். அப்படியான ஒரு கதையை படமாக எடுத்த பிளெஸ்ஸி சாரின் முயற்சி போற்றுதலுக்குரியது. இது ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். இந்தப் படத்தில் நானும் ஒரு புள்ளியாக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. படத்தில் இசை ஒரு கதாபாத்திரமாக நகர்ந்து கொண்டே இருக்கும். நஜீப், நடை பிணமாக படத்தில் இருக்கும் பொழுது அவனுக்குள்ளும் உணர்வு இருக்கிறது என்பதை ரஹ்மான் சாரின் இசை கடத்திக் கொண்டே இருக்கும். படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி".
 
 நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ் , 
 
"இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. மிகப்பெரிய அட்வென்ச்சராக இந்தப் படம் இருந்தது. இயக்குநர் பிளெஸ்ஸி, நடிகர் பிருத்விராஜ் இந்தப் படத்திற்காகத் தங்களது ஆன்மாவைக் கொடுத்துள்ளனர். ரஹ்மான் சார் அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். படம் உங்களுக்கும் பிடிக்கும்". 
 
 இசையமைப்பாளர் ரஹ்மான்,
 
 "இந்தப் படம் ஒத்துக்கொள்ளும் பொழுது சீக்கிரம் முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் வேற லெவல் நடிகராக பிருத்விராஜ் உள்ளார். பிளெஸ்ஸி சிறப்பான இயக்கத்தை கொடுத்துள்ளார். சிலர் என்னிடம் கேட்டார்கள். 'இந்த படம் 'மரியான்' போல இருக்குமா என்று!'. 'மரியான்' ஃபிக்‌ஷன். ஆனால் இது உண்மையான கதை. இந்த படத்தின் கதையான 'ஆடுஜீவிதம்' புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. அப்படி என்றால் அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அர்த்தம். அது என்னவென்று நீங்கள் படம் பார்த்து கண்டுபிடித்து சொல்லுங்கள்".
 
 இயக்குநர் பிளெஸ்ஸி 
 
, "இந்த படத்தைப் பற்றி நான் பேசுவதை விட இந்த படம் தான் பேச வேண்டும் என்று நினைப்பேன். கடந்த 20, 25 வருடத்தில் ரஹ்மான் சார் போல ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. ஏனெனில், இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது என்னிடம் பெரிய தயாரிப்பு நிறுவனமோ மற்ற எதுவுமே இல்லை. நஜீப் என்ற கதாபாத்திரத்தின் ஆழம் மட்டுமே இருந்தது. அதை புரிந்து கொண்டு ரஹ்மான் சார் இந்த படத்திற்குள் வந்தார். 2017 ஆம் வருடத்தில் இருந்து இந்த படத்திற்காக ட்ராவல் செய்திருக்கிறார். அவருடைய அர்பணிப்புக்கு நன்றி. பிருத்திவிராஜ் இப்பொழுது என்னுடைய தம்பி போல. அவர் சொன்னது போல இந்த 16 வருடத்தில் அவருக்கு திருமணம், குழந்தை, தயாரிப்பாளர் என பல விஷயங்கள் பார்த்துவிட்டார். ஆனாலும் இந்த படம் தொடங்கியது போலவே இப்போது வரை அதே ஈடுபாட்டோடு இருக்கிறார். ஒளிப்பதிவாளர் சுனில் நான் நினைத்ததற்கும் மேலாக படத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். ஜிம்மியும் சிறப்பாக நடித்துள்ளார். நமது தென்னிந்தியாவில் நிறைய பேர் சவுதி, குவைத் என பல இடங்களுக்கு சென்று கஷ்டமும் பட்டுள்ளனர். சாதனைகளும் புரிந்து பணமும் சம்பாதித்துள்ளனர். இப்படியான அனைவருக்குமே இந்த படம் கனெக்ட்டடாக இருக்கும். நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டமும் மன அழுத்தமும் இருந்தாலும் உள்ளே ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றியை பார்க்க முடியும் என்பது தான் இந்த கதை. படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்