பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க யாஷ் 200 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அளவில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒரு நடிகர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுவாகதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் முதலில் சீதா கதாபாத்திரத்துக்கு ஸ்ரீநிதி ஷெட்டிதான் தேர்வானார் என்றும் பின்னர் அவருக்குப் பதில் சாய்பல்லவி ஒப்பந்தமானார் என்றும் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கமளித்துள்ள ஸ்ரீநிதி “இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்துக்கு நான் ஆடிஷன் செய்தேன். ஆனால் கே ஜி எஃப்க்கு பிறகு என்னை சீதாவாகவும், யாஷை ராவணனாகவும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நான் அதில் இருந்து வெளியேறிவிட்டேன். படக்குழுவும் என்னை அதன் பிறகு தொடர்புகொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.