உலகநாயகன் கமல் ஹாசன் இனிமேல் வெளி தயாரிப்பாளர் படங்களில் நடிக்க போவதில்லை என்றும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்து இருப்பதாகவும் யூடியூபில் சிலர் புதிய செய்தி போல் கூறி வருகின்றனர். ஆனால், நெட்டிசன்கள் இந்த செய்தியை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 90% அவர் வெளிப்படங்களில் நடிப்பதில்லை என்றும், சொந்த தயாரிப்பில்தான் நடித்து வருகிறார் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கமல்ஹாசன் கடைசியாக 'பாபநாசம்' என்ற படத்தில்தான் வெளி தயாரிப்பாளர் படத்தில் நடித்தார். அதன் பிறகு 'தூங்காவனம்', 'விஸ்வரூபம்', 'விஸ்வரூபம் 2', 'விக்ரம்', 'தக் லைஃப்' உள்ளிட்ட அனைத்துமே அவரது சொந்த தயாரிப்புகள்தான்.
'இந்தியன் 2' என்பது இந்தியன் படத்தின் தொடர்ச்சி என்பதால் தான் கமல்ஹாசன் அந்த படத்தை தயாரிக்கவில்லை என்பதும், அந்தப் படத்தை லைகா தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், 'கல்கி 2898 AD' படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்தார் என்பதும், அதுவும் வெளி தயாரிப்பாளர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.