தனுஷுடன் போட்டிபோடும் சிவகார்த்திகேயன்! போட்டிக்கு தயாரான "மாரி"
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (11:43 IST)
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படமும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படமும் ஒரே தேதியில் வெளியாவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் தனுஷ். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தின் மூலம் சிவாவை சினிமா உலகில் விதை போட்டு விதைத்தவர் தனுஷ் . அதைப் பல மேடைகளில் சிவகார்த்திகேயன் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் சில சூழல் வழுக்கைத் தலைபோல வழுக்கி விடுவதும் உண்டு அல்லவா? அப்படியொரு சூழல் தான் தற்போது நடந்துள்ளது.
இன்றைய மார்க்கெட்டில் பெரிய இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் , பெரிய இடத்து மாப்பிள்ளையான தனுஷிடம் நேரடியாக தன் படம் மூலம் மோத ஆரம்பித்து விட்டார். வரும் 21-ம் தேதி தன் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள "கனா" வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி கேட்ட சிவாவுக்கு சங்கமும் கேட்டைத் திறந்து விட்டது.
இதற்கிடையில் மடை திறந்த தண்ணீரில் பாறாங்கல் போட்டு அடைக்க தனுஷ் துணிந்து விட்டார். அதாவது , தயாரிப்பாளர் சங்கத்தை அணுகாமலே ’மாரி2’ வை 21-ம் தேதி ரிலீஸ் செய்வதாக தனுஷ் தடாலடியாக அறிவித்து விட்டார்.
உடனே "கூட்றா பஞ்சாயத்தை" என பல தயாரிப்புத் தரப்புகள் வந்து சமரசத்திற்கு அமர்ந்தது . இருந்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை, மெஜாரிட்டி பெரிய இடத்து மாப்பிள்ளைக்கே அதிகம் வாய்த்தது . என் படம் 21ம் தேதி ரீலீஸ் ஆகும்..ஆகணும் என்பதில் தனுஷ் உறுதியாக நிற்க, சங்கமும் துண்டை உதறிவிட்டது. வர்ற 21-ம் தேதியும் அடுத்து வரும் ஜனவரி 10-ம் தேதியும் யார் வேணாலும் எப்படி வேணாலும் படங்களை ரிலீஸ் பண்ணிக்கோங்கப்பா..இப்போ எங்களை ஆள விடுங்க சாமி என சங்கம் சரண்டர் ஆகிவிட்டது .
நேற்றுவரை சிவாவும், தனுஷும் ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு வர இன்று அந்த தட்டையே பொளந்து விட்டனர். அதனால் சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் தங்கள் படங்கள் மூலமாக நேருக்கு நேர் மல்லுக்கட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.