இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் ஆகிய திரைப்படங்களின் வெற்றி மூலமாக கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இதையடுத்து அவர் பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் என்ற படத்தை இயக்கவுள்ளார். படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் படங்களில் ஆணாதிக்கத் தன்மை உள்ளதாகவும், பெண்களை அவர் படங்களின் கதாநாயகர்கள் மிகவும் மலினமாக நடத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது.
படத்தை விட இயக்குனர் சந்தீப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ள்தாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல தன்னையும் தன் படத்தையும் விமர்சிப்பவர்களையும் அவர் இடதுகையால் டீல் செய்வது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் சாய்பல்லவி நடித்த தண்டேல் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்தீப் “நான் என்னுடைய அர்ஜுன் ரெட்டி படத்துக்காக கதாநாயகி தேடிக் கொண்டிருந்தபோது, பிரேமம் படம் பார்த்து சாய்பல்லவியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தேன். அப்போது மலையாளத்தில் இருக்கும் ஒரு நபருடன் இதுபற்றி பேசும்போது கதையைக் கேட்ட அவர் “கண்டிப்பாக அந்த பெண் இந்த படத்தில் நடிக்க மாட்டார். ஏனென்றால் அந்த பெண் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்துகூட படத்தில் நடிக்க மறுத்து வருகிறார் என்று கூறினார். அதனால் என்னால் அவரை அந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.