'சர்கார்' படத்தின் கதைத்திருட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி ஒருவழியாக நேற்று சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வானது. இந்த நிலையில் மேலும் சில படங்களும் தங்கள் கதை என ஒருசிலர் கூற முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் 'கதைத்திருட்டு' குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, 'கதைத்திருட்டு' என்ற வார்த்தையே தவறு. ஒரே சிந்தனை என்றுதான் கூற வேண்டும். ஒருசில வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையை கூறினேன். அவர் அந்த கதையை கேட்டுவிட்டு இதே போன்ற ஒரு கதையில் தான் நான் 'ரஜினி முருகன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளேன். அதில் கூட ஒரு கேரக்டரில் நடிக்க உங்களை பார்த்து பேச வேண்டும் என்று இயக்குனர் பொன்ராம் முடிவு செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியதாக சமுத்திரக்கனி தெரிவித்தார்.
மறுநாள் இயக்குனர் பொன்ராமை வரவழைத்து 'ரஜினி முருகன்' கதையை கேட்டபோது பாதிக்கு மேல் நான் எழுதிய கதையாக இருந்தது. நானும் மதுரைக்காரன், அவரும் மதுரைக்காரர், எனவே ஒரே சிந்தனை வந்ததில் வியப்பில்லை.
எனவே 'கதைத்திருட்டு' என பெரிய வார்த்தை கூறி இதனை பெரிதுபடுத்தாமல் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது இருவரும் உட்கார்ந்து பேசி சமாதானமாக முடிவெடுத்து செல்வதே சினிமாத்துறைக்கு நல்லது என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்