பஞ்சாபி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தானியாவின் தந்தையும், மருத்துவருமான அனில் ஜித் சிங் கம்போஜ், நேற்று மாலை ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கோட் இசே கான் பகுதியில் அமைந்துள்ள ஹர்பன்ஸ் நர்சிங் ஹோம் என்ற அவரது கிளினிக்கிற்குள், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் புகுந்து, மருத்துவரை மிக அருகில் இருந்து சுட்டுள்ளனர். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் இன்னும் அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என கூறப்படுகிறது.
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் மருத்துவரிடம் நோயாளிகள் போல் நடித்து, அவரை அணுகி மிக அருகில் இருந்து சுட்டதாக மோகா காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது மருத்துவர் கம்போஜ் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. அவரது உடல்நிலை இப்போதும் கவலைக்கிடமாகவே உள்ளது.
இந்த சம்பவம் குறித்து, நடிகை தானியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது எங்களுக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் சிக்கலான மற்றும் உணர்ச்சிகரமான நேரம் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஊடகங்கள் தயவுசெய்து எங்களது தனியுரிமையை மதித்து, இந்த சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்ள தேவையான தனிப்பட்ட இடத்தை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து யாரும் யூகங்களை வெளியிடவோ அல்லது இந்த சூழ்நிலை குறித்து கதைகளை உருவாக்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி," என்று குறிப்பிட்டிருந்தார்.